கொரோனா வைரஸ் உடன் போராட, இலங்கை இப்போதே செயற்பட வேண்டும்
பேரலையொன்று வருகின்றது. நாம் தப்பிக்க தயாராக வேண்டிய தருணமிது
மொழிமாற்றம் சங்கீதா D பாக்கியராஜா.
Image via South China Morning Post
இலங்கையில் சுனாமித் தாக்கம் நேரிட்ட வேளையில், முதலில் அது மெதுவாகவே நம்மை நோக்கி வந்தது. பின்னரே மாபெரும் அலையாக திரண்டு எழுந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டதற்கும், அதன் தாக்கம் வெளிப்பட்டதற்கும் நடுவில் மணித்தியாலங்கள் அளவில் நேரமிருந்தது. இலங்கைத் தீவினைச் சுற்றி அலைகள் திரளத்தொடங்கிய போதும் கூட, நமக்கு நேரமிருந்தது. ஆயினும் அப்போது இதன் தாக்கம் தொடர்பில் நாம் அறிந்திருக்கவில்லை. இதன் விளைவாக, 30,000 ற்கும் மேற்பட்ட உறவுகளை நாம் சுனாமியின் கோரத்தாண்டவத்திற்கு பலி கொடுத்தோம்.
ஆனால் இப்போதோ, சுனாமியின் தாக்கம் குறித்து எமக்கு நன்றாக தெரியும். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டவுடன் நாம் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என, கடற்கரைப்பகுதியிலிருந்து அகல வேண்டும் என, முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுக்கு தயாராகி, ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என நன்றாக புரிந்துகொண்டிருக்கின்றோம்.
இதுவும் ஒரு எச்சரிக்கையே! இப்போதே, இக்கணமே செயலாற்ற வேண்டிய தருணம்! உலகளாவிய ரீதியில் கொரோணா வைரஸ் பேரலையாக சுழன்றபடி, இலங்கையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. இந்த நோய்க்கு எதிராக போராடுவதற்கு தேவையான போதிய கால அவகாசம் இலங்கைக்கு தற்போது உண்டு. ஆயினும், இலங்கை மிகத் தீவிரமாக செயற்பட வேண்டும், அதுவும் இப்போதே அதனை மேற்கொள்ள வேண்டும்
2 நோயாளர்கள்.. இல்லையில்லை 5 நோயாளர்கள்..
நான் இதனை எழுத ஆரம்பித்த வேளையில், இரண்டு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். இந்த நோய்த்தொற்றானது, ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்கு கடத்தப்பட்டதன் மூலம் பரவியதாகும். மன்னிக்கவும். இதனை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது; இப்போது உங்களுக்கு என்ன நடக்கின்றது என்பது விளங்கியிருக்கும்.
செஸ் விளையாட்டுப் பலகை (Chess board) ஒன்றில் நெல்மணிகளை நீங்கள் இரட்டிப்பு பெறுமானத்தில் நிரப்பிக்கொண்டு சென்றால், அந்தப் பலகையின் அரைவாசி மட்டம் செல்வதற்குள் 2 பில்லியன் நெல்மணிகளை உங்களால் நிரப்ப முடியும். நாம் அடுக்குகளின் வளர்ச்சி (exponential growth) குறித்து அநேகமாக புரிந்து கொள்வதில்லை என்றாலும் இதனை மாத்திரம் விளங்கிக்கொள்ளுங்கள். கொரோனா தாக்கத்தின் வருகை ஏறத்தாள சுனாமி அலைகள் ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பால் வருவதை ஒத்திருக்கின்றது. நீண்ட காலத்திற்கு இந்த அலைகள் வெறுமனே சிற்றலைகளாக கடல் மேல் அசையும், பின்னர் ஒரு கட்டத்தில் 10 மீற்றர் உயரம் கொண்ட பேரலையாக எழுச்சியுறும். அந்த நேரத்தில், ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகின்றது என்று நீங்கள் உணரும் வேளையில், காலம் கடந்திருக்கும்
சுனாமி இடம்பெற்ற நேரத்தில், இந்தோனேஷியாவிற்கே முதலில் பாதிப்பு ஏற்பட்டது. என்றாலும் இது குறித்து நாம் அப்போது அறிந்திருக்கவில்லை. ஆனால் இன்று, கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பல்வேறு நாடுகள் ஆட்பட்டுள்ளது குறித்து நாம் நன்றாகவே அறிந்துள்ளோம். இத்தாலியை உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.
இத்தாலியில், தொற்று ஏற்பட்ட முதல் வாரத்தில் வெறுமனே இரண்டு நோயாளர்கள் மட்டுமே இனம்காணப்பட்டிருந்தனர். அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் மூவருக்கு தொற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இது அவ்வளவு பெரிய விடயமாக கருத்திற்கொள்ளப்படவில்லை. ஆனால், நான்காவது வாரம் ஆரம்பித்த வேளையில், இந்த எண்ணிக்கை திடீரென ஒன்பதாக உயர்ந்தது. அதனையும் சமாளிக்க முடியும் என இத்தாலி அசட்டையாக எண்ணியது. ஆயினும் அடுத்த நாளில் இந்த எண்ணிக்கை 76 ஆக உயர்ந்து, இறுதியில் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் பரவத்தொடங்கியது.
இரண்டு வாரகாலத்திற்குள் நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 12,500 ஆக அதிகரிக்க, 200 மரணங்கள் நேரிட்டது. முற்றுமுழுதான தனிமைப்படுத்தல் தடுப்புக்காப்பு (Quarantine), வைத்தியசாலைகளில் அதிதீவிர சிகிச்சை முன்னெடுப்பு என இத்தாலிய தேசம் நோயுடன் போராடத் தொடங்கியது.
கொரோனா வைரஸ், மெல்லிய சிற்றலையாக தோன்றி, பிறகு பேரலையாக இத்தாலியை கபளீகரம் செய்கின்றது. மேம்பட்ட சுகாதார சேவையினைக் கொண்டிருந்த இத்தாலி நாட்டின் கட்டமைப்பு முழுமையாக தகர்ந்தது. சரி, இலங்கையில் என்ன நடக்கும் என நினைக்கிறீர்கள்?
இத்தாலியில் ஒவ்வொரு 100,000 மக்களுக்கு 12.51 என்ற விகிதத்தில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) கட்டில்கள் உள்ளன. இலங்கையில் இந்த விகிதம் 2.3 மட்டுமே. தவிர, இலங்கையானது, வட இத்தாலியை ஒத்த சுகாதாரக் கட்டமைப்பினைக் கொண்டிருக்கவில்லை. எமது மருத்துவகூடங்களில் (Hospital wards) இரண்டு நோயார்களுக்கு ஒன்று என்ற அளவிலேயே கட்டில்கள் உள்ளன. தற்போதைய நிலமையில் ICU க்கள் 100% முழுமையாக நிரம்பியுள்ளது. இப்போதே நம்மை தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில், கொரோனா பேரலை தாக்கும் போது, நாம் அனைவரும் மூழ்க வேண்டிய நிலையே ஏற்படும்
இத்தாலியில் இடம்பெற்ற நிகழ்வுகளின் தாக்கம், நாம் துரிதமாக ஆரம்பகட்டத்திலேயே — நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையானது, நெருக்கடி நிலையை கொடுப்பதற்கு மிக முன்னதாகவே தீர்க்கமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது. நோய்த் தொற்று மட்டம் அதிகரித்திருக்கும் வேளையில், நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வினை கட்டுப்படுத்த எத்தனிப்பதானது, காலங்கடந்த செயற்பாடாக விளங்குவதுடன், நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட விடயமாகவும் விளங்கும் (NYTimes)
இப்போதே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
வெள்ளம் வருமுன் அணைகட்டுவது நல்லது
ஆரம்பகட்டத்திலேயே செயலாற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் மகத்தானவை
‘எனது கவனத்தை ஈர்த்த இந்த வரைபடமானது, கொவிட் -19 இன் நாளாந்த நோய்த்தொற்று எண்ணிக்கை மற்றும் ஒரு நாள் இடைவெளியில் மேற்கொள்ளப்பட்ட சமூகத்திலிருந்து விலகியிருத்தல் நடவடிக்கையின் (social-distancing measures) தாக்கத்தினையும் காண்பிக்கின்றது. இந்த வரைவின்படி ஒரே ஒரு நாள் வித்தியாசத்தில், நோய்த்தொற்று விகிதத்தில் 40 சதவீதம் குறைவினைக் காணக்கூடியதாக உள்ளது. இது மிக நல்லதொரு விடயமாகும். நிலமையை கட்டுப்படுத்துவதில் எவ்வளவு தீவிரம் காண்பிக்க வேண்டும் என்பதை இந்த படவரைவு சுட்டிக்காட்டுகின்றது’ என டொக்டர். ப்ரிட்டா ஜ்வெல் (Dr. Britta Jewell) அவர்கள் குறிப்பிட்டுள்ளார் (NYTimes)
இதுபற்றி, நான் ஏற்கனவே பல முறை வலியுறுத்தியுள்ளேன். இந்நேரத்தில் உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வுகள், நான் எழுதியதை சரியென்று உங்களுக்கு நேரடியாகவே நிரூபித்திருக்கும். உங்கள் உள்ளத்தில் உண்மையான பயத்தினை நீங்கள் உணர்ந்துகொள்ளவில்லை என்றால், நீங்கள் எதனை மனதில் வைத்து, தைரியமாக உள்ளீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த உணர்வு வெறும் பீதியல்ல, உங்கள் உடல், நீங்கள் என்ன செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மூளைக்கு உத்தரவிடுவதற்கான அடையாளம் இதுவாகும். இந்த தகவல்களை நாம் பெற, ஆயிரக்கணக்கான மக்கள் கஷ்டப்பட்டு இறந்துள்ளார்கள்
அவர்களுக்கு நடந்ததை நாம் கேட்டு அறிந்து அதற்கமைய பாடம் கற்றுக்கொள்ளலாம்.
என்ன செய்ய வேண்டும் ?
முதலில் யார், என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய வேண்டும். இலங்கையை பொறுத்தவரையில், நாட்டின் ஜனாதிபதி, பொது சுகாதார அதிகாரசபைகள் மற்றும் ஈற்றில் இராணுவம் என்ற வரிசையிலே கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கையில் நான் வாக்களிக்காத அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது. ஆயினும் அவர்கள் விஞ்ஞானிகளின் அறிவுறுத்தல்களுக்கு செவிமடுக்கின்றார்கள், அதிஷ்டவசமாக அவர்கள் ஸ்திரமாக இயங்கக்கூடிய நிலையிலும் உள்ளார்கள். கோட்டாபயவிடம் இதற்கான ஆற்றல் உள்ளது என்பதுடன், சரியான நபர்களின் ஆலோசனைகளை அவர் செவிமடுக்கின்றார். இந்த நேரத்தில் 100% அவர்களுக்கு ஆதரவளித்து, அவர்கள் சொல்வதை கட்டாயம் கேட்க வேண்டும். அரசாங்கமானது, எமது பொது சுகாதார அதிகாரிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு, அவர்களுக்கு தடையாக இருக்கக்கூடிய விடயங்களை அகற்றி சகாயமளிக்க வேண்டும்
நம்மைப் போன்ற நாடுகள் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) சொல்வதை கேட்க வேண்டும் என்பதுடன, சீனா, தென் கொரியா, தாய்வான் போன்ற நாடுகள் எவ்வாறு வெற்றிகரமாக இந்நோயை முகாமை செய்துள்ளன என்பது குறித்தும் கற்றுக்கொள்ள வேண்டும். முடியுமானால், குறிப்பிட்ட அந்த நாடுகளில் இருந்து, நிபுணர்கள் மற்றும் வளங்களை பெற்றுக்கொள்வதும் சிறந்தது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பது என்ன:
“தனியே பரிசோதனை செய்வது மாத்திரமல்ல, தனியே நோய்த் தொற்றின் தடம் அறிவது மாத்திரமல்ல, தனியே ஒதுக்கிவைத்து தனிமைப்படுத்தல் மாத்திரமல்ல, தனியே சமூகத்திலிருந்து தொலைவாதல் மாத்திரமல்ல, இவை அனைத்தையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்”
சீனா மற்றும் ஏனைய நாடுகள் இந்த நடைமுறையினை மிகக் கடுமையாக பின்பற்றின. நான் முழுமையான அறிக்கையினை பெற்றுக்கொள்ளும் வகையில், இந்த வீடியோவை பார்க்குமாறு சிபாரிசு செய்கின்றேன்.சீனாவில் வெப்பநிலையை அளவிடும் ஸ்கேனர்கள் சகல இடங்களிலும் வைக்கப்பட்டிருந்தன. யாருக்கேனும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் காய்ச்சல் கிளினிக்கிற்கு (fever clinic) கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நோய் உள்ளது என (tested positive) கண்டறியப்பட்டால், உடனடியாக குடும்பத்தினரிடமிருந்தும் பிரிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர்
ஒவ்வொரு நோய்த்தொற்று உள்ளவர்களையும் கண்டறிந்து, அவர்களை பரிசோதித்து, தனிமைப்படுத்தி, நோயாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடித்து என இலங்கை இப்போது, இந்நோயை கட்டுப்படுத்தக்கூடிய கட்டத்தில் உள்ளது. இதனை மட்டுமே நாம் குறிப்பிட்டதொரு நீண்ட காலத்திற்கு செய்ய முடியும். இது ஒரு அத்தியாவசிய முன்னெடுப்பாகும் என்பதுடன் இவற்றினை செயற்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஆதரவும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு நமது ஆதரவை அளிப்பதன் மூலமே, பொது சுகாதார அதிகாரிகள் (public health officials) நோய் பரவல் பாதையினை முடிந்தளவு அடைத்து இல்லாதொழிக்கும் தமது பணியினை இலகுவாக முன்னெடுக்க முடியும். கொரோனா பேரலை நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், சுனாமி அலைகள் மேலெழும் போது, நாம் உள்நிலப்பரப்பிற்குள் நகர்தலை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது கட்டாயமாக நாம் வெளியே எங்கும் செல்லாது வீடுகளிலேயே தங்க வேண்டும்
கடற்கரையில் இருந்து அப்பால் விலகிச் செல்லுங்கள்
சீனா, நோய்நிலை குறித்து மூடிமறைப்பதை நிறுத்தியவுடன், உடனடியாக, முழுமையான ஒரு மாகாணத்தினையே முற்றுமுழுதாக மூடியதுடன், ஏறத்தாள ஒரு பில்லியன் மக்களின் நடமாடும் சுதந்திரத்தினை முற்றாக நீக்கியது. இதனைத்தவிர பல மூலோபாயக் கட்டுப்பாடுகளும் (surgical controls) விதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் இலங்கையை பொறுத்தவரையில் சீனாவை ஒத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வேண்டிய தொழினுட்ப வசதிகள் இல்லை என நான் நினைக்கின்றேன். எது எவ்வாறிருப்பினும், நம்மால் முடிந்ததை நாம் முன்னெடுக்க வேண்டும்
நம்மிடமுள்ள மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் நாம் செய்யக்கூடிய மிக இலகுவான செயற்பாடு, சமூகத்திலிருந்து விலகியிருத்தலே (social distancing). பாடசாலை மட்ட big matches’களை இரத்துச்செய்தல், புதுவருடப்பிறப்பு நாட்கள் போன்ற தினங்களில் பாரியளவில் வெகுஜன இடம்பெயர்வுகளை ( mass migrations) மேற்கொள்வதை தவிர்த்தல், திருமண வைபவங்கள், கருத்தரங்குகள், கேளிக்கைகள், பார்ட்டிகள் போன்றவற்றை இரத்துச்செய்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். பெற்றோர்களின் அதீத பீதி காரணமாக நாம் ஏற்கனவே பாடசாலைகளை மூடியுள்ளோம். ஆயினும் இப்போது நாம் ஒருவருக்கொருவர் மற்றவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படாதவண்ணம், கவனமாக, சகாயமாக இருக்க வேண்டும். அனைத்தையும் இரத்துச் செய்ய வேண்டிய நேரமிது.
பொது சுகாதார அலுவர்கள், இந் நோய்நிலையினை எதிர்த்துப் போராடுவதற்கான வாய்ப்பையே இதன் மூலம் அளிக்க முடியும். நாம் செய்யும் ஒவ்வொரு செயற்பாடுகளும், தற்போதைய கட்டுப்படுத்தும் கட்டத்தில் (containment phase) அவர்களுக்கு மேலும் பணிச்சுமையை அதிகரிக்கின்றது. எம்மால் கொரோனா வைரஸ் தொற்றலை நிறுத்த முடியாது ஆனாலும் அதன் வேகத்தை மிதப்படுத்த முடியும். தொற்றல் வளைவினை ஓரளவிற்கு சமநிலைப்படுத்த முடியும் (flatten the curve)
ஒவ்வொருக்கொருவர் எந்தளவுக்கு குறைந்த தொடர்பினை கொண்டிருக்கின்றோமோ, பொது சுகாதார அலுவலர்கள், தொடர்பிலிருந்தவர்கள் குறித்த தடமறிதலை (contact tracing) குறைவாக மேற்கொள்ள முடியும். இந்த நடவடிக்கையானது, நீண்ட காலத்திற்கு முன்னெடுக்கப்படப்போவதுமில்லை, அதே நேரம் இது துல்லிமான ஒரு செயற்பாடும் இல்லை. எம்மிடம் சிறந்த தொழினுட்பம் இருக்குமாயின், தாய்வான் அல்லது ஹொங்கொங் போன்று இதனை விட மிகச்சிறந்த மூலோபாய செயற்பாடுகளை, எம்மால் மேற்கொள்ள முடியும். ஆனால், எம்மால் அது முடியாதென நான் நினைக்கின்றேன்.கொரோனா பேரலை நம்மை நோக்கி வருகின்றது, அதுவரைக்கும் நாம் நமக்களிக்கப்பட்டிருக்கும் கால அவகாசத்தினை நீட்டித்துக்கொள்ள வேண்டும்
இதற்கான முதல் வழி,சர்வதேச பயண கட்டுப்பாடுகளை விதித்தலாகும். முக்கியமாக எமது சுற்றுலாப்பயணத்துறையினை முழுமையாக நிறுத்த வேண்டும். இந்த நடவடிக்கை, நம் தீவு வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். அதன் காரணமாக, இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் எதிர்விளைவுகள் ஏற்படவும் கூடும். ஆயினும் நாம், நோய்த்தொற்றுடன் போராடுவதற்கான தயார்ப்படுத்தலை மேற்கொள்வதற்கான காலஅவகாசத்தினைபெற்றுக்கொள்ளவே எத்தனிக்கின்றோம். நம்மை தயார் செய்துகொள்ள இந்த காலகட்டம், கட்டாயம் தேவை
மீண்டெழ தயாராகுதல்
கொரோனா வைரஸ் பரவுதலை நம்மால் எப்போதும் கட்டுப்படுத்த முடியாது. இப்போது எங்கும் தொற்றல் நடந்துகொண்டிருக்கின்றது. இயன்றளவு முன்னெச்சரிக்கையுடன், நோய்ப்பரம்பலை கட்டுப்படுத்துதலை எமது சுகாதார கட்டமைப்பு எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதை மட்டுமே எம்மால் உறுதிப்படுத்த முடியும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது, எமது வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் (protective equipment), பரிசோதனைக் கருவிகள் (testing kits) போன்றவற்றை போதியளவில் வைத்திருத்தலாகும். உண்மையில், சீனாவை விட வேறு யாராலும் இதனை இத்தனை இலகுவாகவும், நேர்த்தியாகவும் கையாண்டிருக்க முடியும் என நான் நினைக்கவில்லை. சீனாவின் உதவியை கட்டாயம் நாம் பெற்றுக்கொள்ளவே வேண்டும் என நான் நம்புகின்றேன். அவர்கள் ஏற்கனவே ஏராளம் உதவிகளை அனுப்பியுள்ளனர். ஆனாலும் நமக்கு இன்னும் தேவை. இதனை செய்வதற்கு யாராவது ஒருவர் சீன தூதரின் வீட்டிலேயே குடியிருக்க வேண்டியிருயிருந்தாலும் பாதகமில்லை
மீண்டெழுதல்
மீண்டெழும் பாதையானது, நம்பமுடியாதளவு கடினமாக இருக்கும். ஏனென்றால் நாம் பொருளாதாரத்தினை நிறுத்தி மூடுதல் (shutdown) பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம். பொருளாதாரத்தினை கதவுகளை மூடுவது மக்களைக் கொல்லக்கூடும். பொதுஜனங்கள் பசியால் வாடுவார்கள். எமது சுற்றுலாத்துறையானது, ஒன்று, இரண்டு, இப்போது மூன்றென கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. எல்லாமே தலைகீழாக செல்கின்றது. தென்பிராந்தியத்தில் வாழ்பவர்கள், தமது van’களுக்கான மாதாந்தக் கொடுப்பனவுகளை செலுத்துவதற்கே தடுமாறிக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களின் வாழ்வாதாரமே அழிந்துவிட்டது
சமூக விலக்கல் (social distancing) நடவடிக்கை முன்னெடுக்கப்படும் வேளையில், நாளாந்த ஊதியம் பெறுபவர்கள் என்ன செய்வார்கள் என்று நாம் சிந்திப்பதில்லை.நாம் கட்டாயம் அதிகரிக்க வேண்டிய சமூக விலக்கல் காரணமாக நேரிடும் இந்த ஒட்டுமொத்த பொருளாதார சரிவு, வறுமையில் வாடுபவர்கள், மத்தியதர மக்கள் என அனைவரையும் பாதிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை
இங்கிலாந்தில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை கவனத்திற்கொள்ளுங்கள். அவர்கள் பொருளாதார நடவடிக்கைகளை பாதுகாப்பதையே முக்கியமாக கருதி, வைரஸ் பரவலை தடுப்பதனை கவனத்திற்கொள்ளாமல் விட்டுள்ளனர். நோய் பரிசோதனைகள் செய்வதை நிறுத்திய அவர்கள், அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் கைவிட்டுள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனமோ (WHO), வேறு நிறுவனங்களோ இது போன்ற போக்கினை சிபாரிசு செய்யவில்லை. உண்மையில், நாமும் இங்கிலாந்தின் உதாரணத்தினை பின்பற்றக்கூடாதென்றே நான் நினைக்கின்றேன். அனைத்து முற்காப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட சீனா, மில்லியன் கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றியதுடன் நின்றுவிடாது, இப்போது மீண்டெழவும் ஆரம்பித்துள்ளது. இதுவே நாம் முன்னெடுக்கத்தக்க தார்மீக பாதை என நம்புகின்றேன். இதனையே அரசாங்கமும் கைக்கொள்ள வேண்டும். இலங்கை அரசு இவ்வாறான நடவடிக்கையினையே முன்னெடுக்கின்றது என நினைக்கிறேன்.
ஒரு கட்டத்தில் நாம்பயணக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டி வரலாம். அப்போது கொரோனா பேரலை நாட்டிற்குள் வந்திருக்கக்கூடும். அவ்வேளையில் நாம் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் கூட அதனை எதிர்கொள்ள முடியாது மூழ்கியிருப்போம். அந்த வேளையில் நாம் எமது எல்லைகளை திறக்கவேண்டியும் நேரிடலாம்
ஒரு கட்டத்தில், வைரஸ் ஏற்கனவே தீவிரமாக பரவத்தொடங்கியிருக்கும் நிலையில் அனைத்து முன்னெடுப்புகளும் வலுக்குறைந்திருக்கக்கூடும். நோய்த்தொற்று குறித்த வரைபடத்தில், பரவல் வளைவினை சமப்படுத்துவது என்பது, குறைந்தளவு நோயாளர்களின் எண்ணிக்கை என்பதை குறிக்காது. காலப்போக்கில் பரவல் அதிகரித்திருக்கும் நிலையிலும், உங்கள் சுகாதாரக் கட்டமைப்பு சீர்குலையாது செயற்படுகின்றது என்பதையே அது குறிக்கின்றது. இந்த மையப்புள்ளி எங்கிருக்கின்றது என்பதோ, எப்போது, அடுத்து என்ன நடைபெறும் என்பதோ எனக்குத் தெரியாது. சமூக விலக்கல் நடவடிக்கை தளர்த்தப்படும் போது, வைரஸ்தொற்று மீண்டும் நேரிடுமா என்பதும் எனக்கு தெரியாது. நாம், சீனா, தென்கொரியா போன்ற நிஜமாக அபிவிருத்தியடைந்த நாடுகள் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற புதிய மூன்றாம் உலக நாடுகள் செய்பவற்றை தவிர்க்க வேண்டும்.
அடுத்து என்ன?
சத்தியமாக எனக்குத் தெரியாது. மிக முன்னேறிய நாடுகள் என்ன செய்கின்றன என்பது வரையே எம்மால் நோக்க முடியும். ஆயினும் குறித்த நாடுகள் இன்னும் வழமை நிலமைக்கு திரும்பவில்லை. சாதாரண வழமை நிலை என்பது, முன்னரைப் போலவே இருக்கும் என நான் நினைக்கவில்லை. நாம் எப்படி வாழ்கிறோம் என்பது குறித்து தீர்க்கமாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அதீத தயார்ப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும், ஒருவருக்கொருவர் சிறப்பான கவனித்தலை அளிக்க வேண்டும் — காரணம் நாம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் இணைக்கப்பட்டுள்ளோம்
இவற்றைத் தவிர, நாம் அனைவரும் துயரப்பட வேண்டியிருக்கும் என நான் அச்சப்படுகின்றேன். நாம் இந்த பேரலையை எதிர்த்துப் போரிட முடியும், அப்பால் நகர்ந்து செல்ல முடியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தயார்ப்படுத்த முடியும், மீண்டுவர முடியும் — ஆயினும் பாதிப்பினை தவிர்க்க முடியாது. நம்மில் பலரை இந்நோய் காவுகொள்ளும். மன்னித்துக்கொள்ளுங்கள், நான் எனக்காக வருந்துகிறேன், உங்களுக்காக வருந்துகிறேன். இதனைப் போன்ற சம்பவங்களை தலைமுறை தலைமுறையாக நாம் எதிர்கொண்டே வருகின்றோம், ஆனாலும், இதுவரை எந்தவொரு பாதிப்பும், முன்பை விட நன்றாகிவிட்டதென்ற நிலையை நமக்கு அளிப்பதில்லை. என்றாலும், நான் சொல்வதைக் கேளுங்கள். நாம் தற்போது மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களும் பத்து நாளைகள் அல்லது நூறு கிழமைகள் அளவு பெறுமதி வாய்ந்தது. இன்று நாம் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் மற்றும் முன்ஜாக்கிரதைகள் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான உயிர்களை பாதுகாக்கக்கூடும். எனவே இலங்கையர்களே தயவு செய்து, இப்போதே செயற்படுங்கள்